WELCOME TO EVA STALIN IAS ACADEMY

October TNPSC Tamil Current Affairs


1.மீண்டும் ‘மஞ்சப்பை’ விழிப்புணர்வு இயக்கம்- முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்


‘பிளாஸ்டிக்’ பயன்பாட்டினால் நாளுக்கு நாள் பூமி அதிகமான பாதிப்பை சந்தித்து வருகிறது. கடல் வாழ் உயிரினங்கள் உள்பட சுற்றுச்சூழலுக்கும் மிகப்பெரிய மாசு ஏற்படுத்துகிறது.இதற்காக பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க தமிழகத்தில் மீண்டும் ‘மஞ்சப்பை’ திட்டம் விழிப்புணர்வு தொடங்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இந்த நிகழ்ச்சியில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார்.பிளாஸ்டிக் பை பயன்பாட்டை தவிர்க்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதற்கு மாற்றாக துணிப்பைகளை உபயோகிக்கும் பழக்கத்தை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும் மீண்டும் மஞ்சப்பை திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

2.தேர்தல் சீர்திருத்த மசோதா - பாராளுமன்ற மாநிலங்களவையில் நிறைவேற்றம்

தேர்தல்களில் கள்ள ஓட்டுகள் பதிவாவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று வாக்காளர் பட்டியலில் ஒரு வாக்காளர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பதிவு செய்திருப்பது ஆகும். இதை தடுக்கவும், வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை சரிசெய்யவும் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு திட்டமிட்டது. இதற்காக தேர்தல் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள முடிவு செய்தது. அதன்படி உருவாக்கப்பட்ட தேர்தல் சட்டங்கள் (திருத்தம்) மசோதா 2021-க்கு மத்திய மந்திரிசபை சமீபத்தில் ஒப்புதல் வழங்கியது.இதற்கிடையே, இந்த மசோதாவை மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ மக்களவையில் தாக்கல் செய்தார். மசோதாவை பாராளுமன்ற நிலைக்குழு ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டு மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. மசோதா சொல்வது என்ன? 1.ஆண்டுதோறும் ஜனவரி 1-ம் தேதியை கணக்கில்கொண்டு 18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படுகின்றனர். ஜனவரி 2-ம் தேதிக்கு பிறகு 18 வயது பூர்த்தியாகும் இளம் தலைமுறையினர், வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்க்க ஓராண்டு காத்திருக்கும் நிலை உள்ளது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், ஓராண்டில் 4 முறை புதிய வாக்காளர்களை சேர்க்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்று மத்திய சட்ட அமைச்சகத்துக்கு தலைமை தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்திருந்தது. 2 .அதேபோல, போலி வாக்காளர்களை களையவும், கள்ள ஓட்டு போடுவதை தடுக்கவும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறது. கடந்த 2015-ம் ஆண்டு வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் திட்டத்தை தேர்தல் ஆணையம் தொடங்கியது. ஆனால், ஆதார் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு காரணமாக அந்த திட்டம் கைவிடப்பட்டது.அதனால், வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைக்க சட்டத் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்றும் மத்திய சட்ட அமைச்சகத்திடம் தலைமைத் தேர்தல் ஆணையம் பரிந்துரைத்திருந்தது.தேர்தல் ஆணையத்தின் இந்த பரிந் துரைகளுக்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது. இதைத் தொடர்ந்து, தேர்தல் சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. 3 .தேர்தல் நேரத்தில் பள்ளி, கல்லூரி களை வாக்குச்சாவடி அமைத்தல், வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைத்தல் போன்ற பணிகளுக்கு தேர்தல் ஆணையம் பயன்படுத்துகிறது. அவ்வாறு பயன்படுத்தும்போது பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள் தரப்பில் எதிர்ப்புகள் எழுகின்றன. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் தேர்தல் சீர்திருத்த மசோதா அமைந்துள்ளது. புதிய மசோதா மூலம் எந்தவொரு வளாகத்தையும் தேர்தல் நடத்துவதற்கு பயன்படுத்திக் கொள்ள தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் வழங்கப்பட உள்ளது. 4 .மேலும், புதிய மசோதாவில் பாலின சமத்துவமும் நிலை நாட்டப்படுகிறது. தற்போதைய சட்ட விதிகளின்படி, ராணுவ வீரர் ஒருவர் பணி தொடர்பாக வெளியூர் சென்றிருந்தால் அவருக்கு பதிலாக அவரது மனைவி தேர்தலில் வாக்களிக்க முடியும். ஆனால், ராணுவத்தில் பணியாற்றும் பெண்ணின் கணவர் வாக்களிக்க முடியாது. தற்போது, ராணுவ பெண் அலுவலரின் கணவரும் வாக்களிக்க புதிய சட்ட மசோதாவில் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. இந்த மசோதா மாநிலங்களவையிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட பிறகு அமலுக்கு வரும்.

3. ‘லைட்-1’ நானோ செயற்கைக்கோள்,விண்ணில் ஏவப்பட்டதுி

அமீரகம்-பக்ரைன் நாடுகளுக்கு இடையே அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் துறைகளில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின்படி இருநாட்டு கூட்டமைப்பில் ‘லைட்-1’ என்ற நானோ செயற்கைக்கோள் ஒன்று உருவாக்கப்பட்டது. இந்த செயற்கைக்கோளை அமீரகத்தின் கலீபா பல்கலைக்கழகம், அபுதாபி நியூயார்க் பல்கலைக்கழகம் மற்றும் பக்ரைன் நாட்டை சேர்ந்த பொறியாளர்கள் என மொத்தம் 23 பேர் கொண்ட குழுவினர் உருவாக்கியுள்ளனர். இதில் 14 பேர் அமீரக பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்கள் ஆவர்.‘லைட்-1’ நானோ செயற்கைக்கோள், வானில் உள்ள தாழ்வான குமுலஸ் மேகங்களில் ஏற்படும் மாற்றங்களை ஆராயும். மேலும் வளிமண்டலத்தில் காமா கதிர்வீச்சு மற்றும் இடி, மின்னல் குறித்த கண்காணிப்பு பணிகளிலும் ஈடுபடுத்தப்பட உள்ளது. அமீரக விண்வெளி ஏஜென்சி மற்றும் பக்ரைன் தேசிய விண்வெளி அறிவியல் ஏஜென்சி ஆகியவைகள் இதற்கு ஒத்துழைப்பு அளித்துள்ளன.பெரிய வகை செயற்கைக்கோளுக்கு சற்றும் குறையாத வகையில் மிகத்திறன் வாய்ந்த தொழில்நுட்பங்கள் இதில் உள்ளது. இந்த செயற்கைக்கோள் தற்போது அமெரிக்காவில் இருந்து ‘ஸ்பேஸ் எக்ஸ் சி.ஆர்.எஸ்-24’ என்ற விண்கலத்தில் வைக்கப்பட்டு ‘பால்கன்-9’ என்ற ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது

4. பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 21 ஆக உயர்த்தும் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல்

ஜெயா ஜெட்லி தலைமையில் நிதி ஆயோக் சிறப்புக்குழு அமைக்கப்பட்டு பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை மறு நிர்ணயம் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். இந்த குழு பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 18-ல் இருந்து 21 ஆக உயர்த்த பரிந்துரை செய்து தங்கள் ஆய்வறிக்கையை மத்திய அரசிடம் சர்ப்பித்தது.இதற்கிடையில், ஜெயா ஜெட்லி தலைமையிலான குழு சமர்ப்பித்த பரிந்துரையின் அடிப்படையில் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 21- ஆக உயர்த்த கடந்த 16-ம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில், பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 18-ல் இருந்து 21 ஆக உயர்த்தும் மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி ஸ்மிருதி இராணி இந்த மசோதாவை தாக்கல் செய்தார்.இதன் இடையில் எதிர்க்கட்சிகளின் ஆட்சேபத்தால் குழந்தை திருமண தடை சட்ட திருத்த மசோதாவை நிலைக்குழுவுக்கு அனுப்ப அமைச்சர் ஸ்மிருதி இரானி அவைத் தலைவருக்கு பரிந்துரை செய்தார். இதன்படி மசோதா நிலைக் குழுவுக்கு அனுப்பப்பட்டது.

5. கர்நாடகா: கட்டாய மதமாற்ற தடை சட்ட மசோதா நிறைவேற்றம்

பாஜக ஆட்சி செய்து வரும் கர்நாடக மாநிலத்தில் கட்டாய மதமாற்றம் நடைபெறுவதாகவும், இதை தடுக்க சட்டம் கொண்டு வரப்படும் என்றும் அம்மாநில முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்தார். அதன் படி, கட்டாய மதமாற்றத்தை தடுக்கும் நோக்கத்தில் கர்நாடக மத சுதந்திர உரிமை பாதுகாப்பு மசோதா என்ற பெயரில் மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த மசோதா கர்நாடக சட்டசபையில் இன்று நிறைவேற்றப்பட்டது. முக்கிய அம்சங்கள் மதமாற்ற தடை சட்ட மசோதாவில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:- * மதம் மாற விரும்புபவர்கள் 2 மாதங்களுக்கு முன்பே அந்தந்த மாவட்ட கலெக்டரிடம் விண்ணப்பிக்க வேண்டும். * மதம் மாறினால், அவர்களின் அடிப்படை சாதியின் மூலம் கிடைக்கும் இட ஒதுக்கீட்டின் பலன்கள் உள்பட அனைத்து சலுகைகளையும் இழப்பார்கள். அதே நேரத்தில் அவர்கள் சேரும் மதத்தில் கிடைக்கும் சலுகைகளை பெற முடியும். * இந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும். * சிறுவர்கள், பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களை மதம் மாற்ற முயற்சி செய்தால் அத்தகையவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரமும் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. கூட்டு மதமாற்றத்துக்கு... * மேலும் தவறு செய்தவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்ற அம்சமும் மசோதாவில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. *அதே போல் கூட்டு மதமாற்றம் செய்தாலும் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். மேற்கண்டவை அந்த மசோதாவில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், கட்டாய மதமாற்ற தடை சட்ட மசோதா கர்நாடக சட்டசபையில் இன்று நிறைவேற்றப்பட்டது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த போதும் மசோதா நிறைவேற்றப்பட்டது. தற்போது நிறைவேற்றப்பட்ட கட்டாய மதமாற்ற மசோதா அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. அமைச்சரவையின் ஒப்புதலையடுத்து மசோதா சட்டமாக அமலுக்கு வர உள்ளது.

6. அதிநவீன ஏவுகணையான ‘அக்னி-P’ சோதனை வெற்றி

இந்தியாவின் அதிநவீன புதிய தலைமுறை ஏவுகணையான அக்னி - P, வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டுள்ளது. அணு ஆயுதங்களை சுமந்து சென்று கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து இலக்கை துல்லியமாக தாக்கும் வல்லமை படைத்த இந்த ஏவுகணை ஒடிஷாவின் பாலசோர் கடற்கரையில் உள்ள ஏ.பி.ஜே.அப்துல் கலாம் தீவிலிருந்து ஏவப்பட்டது. அக்னி -P ஏவுகணை, திட்டமிடப்பட்ட இலக்கை துல்லியமாக தாக்கியதாக ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை இரட்டை வழிகாட்டுதல் அமைப்புடன் கூடிய திட உந்துசக்தி ஏவுகணையாகும். இந்த இரண்டாவது சோதனையானது கணினியில் ஒருங்கிணைக்கப்பட்ட அனைத்து மேம்பட்ட தொழில்நுட்பங்களின் நம்பகமான செயல்திறனை நிரூபித்திருப்பதாகவும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

7. பிலிப்பைன்சை புரட்டிப்போட்ட ‘ராய்’ புயல்

தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சின் மத்திய மற்றும் தென்கிழக்கு தீவு மாகாணங்களை ‘ராய்’ என்கிற அதிக சக்தி வாய்ந்த புயல் புரட்டிப்போட்டுள்ளது. இதனால் சமீபத்திய ஆண்டுகளில் பிலிப்பைன்சை தாக்கிய மிகவும் சக்தி வாய்ந்த புயலாக இது பார்க்கப்படுகிறது.

8. பிரதமர் மோடிக்கு பூடான் நாட்டின் மிக உயரிய விருது

பூடான் நாட்டின் தேசிய தினமான பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதான நகடக் பெல் ஜி கோர்லோ வழங்கப்பட உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.பூடான் நாட்டின் 114-வது தேசிய நாளான டிச.17 அன்று பல்வேறு துறைகளில் உள்ளவர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

9. தமிழக அரசின் மாநில பாடலாக ‘தமிழ்த்தாய் வாழ்த்து' முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்நாட்டின் அனைத்து விழாக்களிலும் மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய “நீராரும் கடலுடுத்த’’ எனும் பாடல் பாடப்படவேண்டும் எனும் கோரிக்கை 1913-ம் ஆண்டைய கரந்தை தமிழ்ச்சங்கத்தின் ஆண்டறிக்கையில் இடம் பெற்றது. இந்த பாடலை தமிழ்த்தாய் வாழ்த்து பாடலாக, 1914-ம் ஆண்டு முதல் கரந்தை தமிழ்ச்சங்கத்தின் ஆண்டு விழாக்களில் பாடிவந்துள்ளார்கள். மேலும், கரந்தை தமிழ்ச்சங்கத்தை தாய்ச்சங்கமாக கொண்டு தமிழகத்தின் பல பகுதிகளில் உருவான தமிழ்ச்சங்கங்களின் விழாக்களிலும் தொடக்கப்பாடலாக இந்த பாடல் பாடப்பட்டது.இந்த பாடலை தமிழக அரசின் பாடலாக அறிவிக்கவேண்டும் என்று அன்றைய முதல்-அமைச்சர் அண்ணாவுக்கு, கரந்தை தமிழ்ச்சங்கத்தினர் கோரிக்கையாக எழுதி அனுப்பியும் வைத்தார்கள். தமிழறிஞர்கள், ஆர்வலர்கள், பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையினை ஏற்று, 1970-ம் ஆண்டு, மார்ச் 11- ந்தேதியன்று நடந்த அரசு விழாவில் அன்றைய முதல்-அமைச்சர் கருணாநிதி பேசும்போது, ‘‘இனி தமிழக அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து இருக்கும். ‘நீராரும் கடலுடுத்த' எனும் மனோன்மணியம் சுந்தரனார் இயற்றிய பாடலே தமிழ்த்தாய் வாழ்த்து பாடலாக அமையும்’’ என்று அறிவித்தார். அதன்படியே 1891-ம் ஆண்டு வெளியிடப்பட்ட புகழ்பெற்ற நாடக நூலான மனோன்மணியம் நூலில் உள்ள பாயிரத்தில் “தமிழ் தெய்வ வணக்கம்’’ எனும் தலைப்பிலுள்ள பாடலின் ஒரு பகுதியை தமிழ்த்தாயை போற்றும் வகையில் அமைந்த வரிகளை ஏற்று, தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை 1970-ம் ஆண்டு நவம்பர் 23-ந்தேதியன்று, கருணாநிதி தலைமையில் அமைந்த அன்றைய தமிழக அரசு தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்து, அரசாணையும் வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையை தொடர்ந்து, தமிழ்நாட்டில் அரசு விழாக்களில், கல்வி நிலையங்களில், பொது நிறுவனங்களில், பொது நிகழ்ச்சிகளின்போது நிகழ்வு தொடங்குவதற்கு முன்னதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டு வருகிறது.இந்தநிலையில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்படுவது குறித்து, சில வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்படவேண்டிய காலச்சூழ்நிலையை ஒட்டி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின் மூலம் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இசைவட்டுகளை கொண்டு இசைப்பதை தவிர்த்து, பயிற்சி பெற்றவர்கள், நிகழ்ச்சியில் பாடவேண்டும் எனவும் சமீபத்தில் ஆணையிடப்பட்டுள்ளது. இந்தநேர்வில் அன்னை தமிழ்மொழியை போற்றிடும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்படுவதை ஒருங்கிணைத்து, நெறிமுறைப்படுத்தவேண்டிய நிலையில், கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றவேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் தற்போது அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. *மனோன்மணியம் சுந்தரனார் இயற்றிய கீழ்க்கண்ட வரிகளைக்கொண்ட தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் தமிழக அரசின் மாநிலப்பாடலாக அறிவிக்கப்படுகிறது. தமிழ்த்தாய்வாழ்த்தின் கீழ்க்கண்ட வரிகள், 55 வினாடிகளில் முல்லைப்பாணிராகத்தில் (மோகனராகம்) மூன்றன் நடையில் (திசுரம்) பாடப்படவேண்டும், நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில் தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும் தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே! அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே! உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!” எழுந்து நிற்கவேண்டும் *தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும், நிகழ்வு தொடங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்படவேண்டும். * தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது அனைவரும் தவறாமல் எழுந்து நிற்கவேண்டும். * மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த அரசாணையின்படி தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்படும்போது எழுந்து நிற்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. * பொதுநிகழ்வுகளில் ‘தமிழ்த்தாய் வாழ்த்து' இசைவட்டுகளைக்கொண்டு இசைப்பதை தவிர்த்து பயிற்சி பெற்றவர்களால் வாய்ப்பாட்டாக பாடப்படவேண்டும். * அன்னை தமிழின் பெருமையை உலகறியச்செய்வதிலும், இளம் தலைமுறையினருக்கு கொண்டு சேர்ப்பதிலும், பொதுமக்களும், தனியார் அமைப்புகளும் பெரும்பங்காற்ற முடியும் என்பதால், தமிழ்நாட்டில் நடைபெறும் தனியார் அமைப்புகள் நடத்திடும் கலை, இலக்கிய மற்றும் பொதுநிகழ்வுகளின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது ஊக்குவிக்கப்படும்.

10. இன்னுயிர் காப்போம்-நம்மைக் காக்கும் 48 திட்டம்” தொடக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

தமிழக அரசு சாலை பாதுகாப்பு, சாலை விபத்துகளைக் குறைத்தல், சாலை விபத்தில் உயிரிழப்புகளைத் தடுத்தல் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தி பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றது. அந்த வகையில், சாலை விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைத்திடும் நோக்கில் தமிழக அரசால் வகுக்கப்பட்ட உன்னத திட்டமே இன்னுயிர் காப்போம் திட்டம்.இத்திட்டத்தின் முக்கிய அங்கமாக, சாலை விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கான அவசர மருத்துவ சிகிச்சை செலவைத் தமிழக அரசே மேற்கொள்ளும் வகையில் இன்னுயிர் காப்போம்-நம்மைக் காக்கும் 48 திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கென அங்கீகரிக்கப்பட்ட 201 அரசு மருத்துவமனைகள் மற்றும் 408 தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 609 மருத்துவமனைகள் உரிய தகுதியின் அடிப்படையில் இணைக்கப்பட்டு, மருத்துவ சிகிச்சைகள் வழங்கிட வழிவகை செய்யப்பட்டுள்ளது. சாலை விபத்துகளில் காயமடைந்தவர்களுக்கு விபத்து ஏற்பட்ட முதல் 48 மணி நேரம் மிக முக்கியம் என்பதைக் கருத்தில் கொண்டு இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு அட்டை உடையவர்கள், இல்லாதவர்கள், பிற மாநிலத்தவர், வெளிநாட்டவர் என அனைவருக்கும் வருமான வரம்பு ஏதும் கணக்கில் கொள்ளாமல், தமிழகத்தின் எல்லைக்குள் ஏற்படும் சாலை விபத்துகளில் காயமடைவோர்களுக்கு முதல் 48 மணி நேரம் வரை கட்டணமின்றி மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட 81 மருத்துவ சிகிச்சை முறைகளுக்கு நபர் ஒருவருக்கு ரூ.1 லட்சம் வரை செலவினத்தில் (ceiling limit) சிகிச்சை மேற்கொள்ளப்படும். இத்திட்டத்தில், சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர் உள்நோயாளியாக அனுமதிக்கப்படும் மருத்துவமனையிலேயே முதல் 48 மணி நேரம் வரை அங்கீகரிக்கப்பட்ட சிசிக்சை முறைகளில் (81 treatment Packages) சிகிச்சை அளிக்கப்படும். 48 மணி நேரத்திற்கு மேலும் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர் நிலையற்றவராக (Unstable) இருந்தால் அல்லது தொடர் சிகிச்சை நடைமுறைகள் தேவைப்பட்டால், பின்வரும் மூன்று வழிகாட்டுதல்களின்படி சிகிச்சைகள் வழங்கப்படும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டப் பயனாளியாக இருந்தால், நோயாளி மேற்கொள்ளும் சிகிச்சை காப்பீட்டுத் திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டிருந்தால், நோயாளியை நிலைப்படுத்தி அந்த மருத்துவமனையிலேயே மேலும் சிகிச்சை தொடரலாம். முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட பயனாளியாக இல்லாமல் இருந்தால், நோயாளி மேற்கொள்ளும் சிகிச்சை காப்பீட்டுத் திட்டத்தில் இல்லை என்றால், நோயாளியை நிலைப்படுத்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சையைக் கட்டணமில்லாமல் தொடரலாம். சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர் அரசு மருத்துவமனைக்குச் செல்லத் தயாராக இல்லை என்றாலோ (அல்லது) தனியார் காப்பீட்டிலோ (அல்லது) பணம் செலுத்தியோ சிகிச்சையைப் பெற விரும்பினால், நோயாளியை நிலைப்படுத்தி அதே மருத்துவமனையிலோ அல்லது அவர் தேர்ந்தெடுக்கும் பிற மருத்துவமனையிலோ சிகிச்சைக்கான கட்டணத் தொகையைத் தனிநபரே செலுத்தி சிகிச்சையைத் தொடரலாம்.இன்னுயிர் காப்போம் -நம்மைக் காக்கும் 48 திட்டத்தில், அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் பற்றிய விவரங்கள் மாவட்ட வாரியாகப் பட்டியலிடப்பட்டு பொதுமக்கள் அனைவரும் அறியும் வகையில் வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

11. முப்படை தளபதிகள் குழுவின் தலைவராக ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே நியமனம்

முப்படை தளபதிகள் குழுவின் தலைவராக ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே நியமனம் செய்யப்பட்டுள்ளார். முப்படை தளபதிகளில் மூத்தவர் என்ற அடிப்படையில் குழுவின் தலைவராக நரவானே நியமனம் செய்யப்பட்டுள்ளார். முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மறைவால் இடைக்கால ஏற்பாடாக ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

12. துர்கா பூஜைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்

இந்துக்களின் முக்கியப் பண்டிகைகளில் துர்கா பூஜையும் ஒன்று. இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டாலும், கொல்கத்தாவில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை அங்கீகரிக்கும் விதத்தில் கொல்கத்தாவின் துர்கா பூஜைக்கு யுனெஸ்கோ அமைப்பு பாரம்பரிய அந்தஸ்து வழங்கியது.

13. 2021 ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை இந்தியாவின் ஹர்னாஸ் கௌர் சாந்து வென்றார்

21 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் ஹர்னாஸ் சாந்து மிஸ் யுனிவர்ஸ் எனப்படும் பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றார்.கடைசியாக கடந்த 2000 ஆம் ஆண்டு லாரா தத்தா, மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றிருந்தார். இந்நிலையில். 21 வயது இளம் பெண்ணான ஹர்னாஸ் சாந்து மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றுள்ளார்.இஸ்ரேலின் எய்லாட் நகரில் நடந்த கண்கவர் போட்டியில் அவருக்கு இந்தப் பட்டம் வழங்கப்பட்டது. முதல் ரன்னர் அப்'பாக பராகுவே அழகியும், 2வது ரன்னர் அப்'பாக தென் ஆப்பிரிக்க அழகியும் தேர்வாகியுள்ளனர்.ஹர்னாஸ் சாந்து பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

14. ’சரயு கால்வாய் தேசியத் திட்டம்' (Saryu Nahar National Project)- உத்தரபிரதேசத்தில் ரூ.9,800 கோடியில் 5 நதிநீர் இணைப்பு திட்டம்

உத்தரபிரதேசத்தின் பல்ராம்பூரில் 5 நதிகளை இணைக்கும் சரயு நதி கால்வாய் திட்டம் முடிக்கப்பட்டு உள்ளது. 1978-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டம் 40 ஆண்டுகளுக்குப்பின் அமலுக்கு வருகிறது.ரூ.9,800 கோடியில் நிறைவேற்றப்படும் இந்த திட்டம் மூலம் 14 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுவதுடன், 29 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவார்கள் எனவும் கூறப்பட்டு உள்ளது.இந்த திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

15. எஸ்சி/எஸ்டி பிரிவினர் மீதான துன்புறுத்தல்களுக்கு எதிரான தேசிய உதவி மைய எண் - 14566

பட்டியல் பிரிவினர் எஸ்சி மற்றும் பழங்குடியினர் எஸ்டி வகுப்பைச் சேர்ந்தவர்கள் மீதான துன்புறுத்தல்களை தடுக்கும் வகையில் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தை முறையாக செயல்படுத்துவதை உறுதி செய்யும் நோக்கத்துடன்,தேசிய உதவி மையம் ஒன்றை மத்திய சமூக நீதி அமைச்சகம் தொடங்கியுள்ளது.இந்த உதவி மையம் நாடு முழுவதும் 14566 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுடன் 24 மணி நேரமும் இயங்கும். குரல் அழைப்பு மூலம் இந்த எண்ணை அணுகலாம். இந்தி, ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழிகளில் இந்த சேவை கிடைக்கும். இதன் செயலியும் செயல்படும். பாகுபாடு இன்றி அனைவரையும் பாதுகாக்கும் நோக்கத்துடன் இது செயல்படுத்தப்படும். ஒவ்வொரு புகாரும் பதிவு செய்யப்பட்டு, தீர்வு காணப்படும். பதிவு செய்யப்பட்ட அனைத்து புகார்களும் விசாரிக்கப்பட்டு, நீதிமன்றங்களில் வழக்காக பதிவு செய்யப்படும்.

Title of the document Title of the document